Saturday, March 8, 2008

இறைவனைக் கண்டால்

சட்டையைக் கொத்தாகப் பிடித்து

கன்னத்தில் அறைந்து

ஏனடா என்னைப் படைத்தாய்

என்று கேட்க ஆசை!

அன்பே தெய்வம்

அன்பே தெய்வம்!

தூய அன்பே தெய்வம்!

மகமது, இயேசு, ராமன், புத்தன்

பற்பல மதத்தினர் பற்பல கூறினும்

அன்பே தெய்வம்

என்பேன் நான்!

தாயின் அன்பு!

தூய காதலியின் அன்பு!

நண்பனின் அன்பு!

அன்பு ஒன்றே உலகைக் காக்கும் சக்தி!

அன்பு இல்லையேல் உலகம் அழிந்து போகும்!

ஆதலால் மானிடனே!

அன்பே தெய்வம்!

தூய அன்பே தெய்வம்!

முருகன் காதல்

உமையாளின் மகனிடம் பறிகொடுத்தேன் - மனதை
உமையாளின் மகனிடம் பறிகொடுத்தேன்!

ஊணின்றி உறக்கமின்றி பரிதவித்தேன் - தோழி
ஊணின்றி உறக்கமின்றி பரிதவித்தேன்!

வெண்ணை யே திருடிய கள்வனடி - மாமன்
வெண்ணை யே திருடிய கள்வனடி!

என்னையே திருடிய கள்வனடி - மருகன்
என்னையே திருடிய கள்வனடி!

சிவனாரின் மைந்தனாம்!
திருச்செந்தூர் குமரனாம்!
வேல் கொண்டு நின்றானடி - முருகன்
வேல் கொண்டு நின்றானடி!

முருகனே! கந்தனே!
திருமாலின் மருகனே!
வீரனே! வேலனே!
கஜமுகனின் தம்பியே!
வேலை எனக்குத் தருவாயோடா
என்று வினயத்துடன் கேட்டேனடி!

குமரியே! அழகியே!
இளம் பெண்ணே! இதயமே!
இரு வேலையே கண்களாய் உடையவளே - உனக்கு
எந்தன் வேல் எதற்கு என்றானடி - முருகன்
வேல் எதற்கு என்றானடி!

குமரப்பா! முருகப்பா!
மயில் மீது வரும் எந்தன்
மன்னவனே கேட்பாயடா!
உந்தன் வேலுக்கு இணை ஏதடா! - அதனால்
ஒரு முறை அதைத் தருவாயடா!
என்று ஆசையுடன் கேட்டேனடி!

வேல் போன்ற விழியாளே!
தேன் போன்ற மொழியாளே!
வேலை உனக்குத் தருவேனடி! - அதன் முன்
கடலாடி வருவேனடி!
என்று கடலோரம் மறைந்தானடி!
செந்தூர் கடலோரம் மறைந்தானடி!

காதல் கவிதைகள் - 5

செந்தமிழ் நீ எனக்கு!

தீஞ்சுவை நான் உனக்கு!

நங்கையடி நீ எனக்கு!

நாணமடி நான் உனக்கு!

வானமடி நீ எனக்கு!

மேகமடி நான் உனக்கு!

வார்த்தையடி நீ எனக்கு!

கவிதையடி நான் உனக்கு!

வசந்தமடி நீ எனக்கு!

சுகந்தமடி நான் உனக்கு!

பாரதம் நீ எனக்கு!

மேன்மையடி நான் உனக்கு!

காதல் தோல்வி

1) காதலிக்கும் மூன்றெழுத்து
துரோகிக்கும் மூன்றெழுத்து
இரண்டுமே உன்னைக் குறிப்பதுதான்
துரதிர்ஷ்டம் பெண்ணே!
-----------------*-------------------------
2) பூக்கும் வரை காத்திருந்ததோ நான்!
பூத்த பின்பு பறித்துச் சென்றதோ அவன்!
எவனோ பறிப்ப தற்கா
இத்தனை நாள் தவங்கிடந்தேன் ?

காதல் கவிதைகள் - 3

உன்னைக் கண்ட கண்களும்
எதையும் காண மறுப்பதேன்?
உன்னைக் கடித்த உதடுகள்
எதையும் சுவைக்க மறுப்பதேன்?
ஒப்பில்லாப் பேரழகே!
ஈடில்லா இளம் பெண்ணே!
உன் உதடு பட்ட இடம்
காயவில்லை கண்ணே!
என் இதயம் தொலைந்த இடம்
காணவில்லை பெண்ணே!
மீனை நான் கண்டதுண்டு!
விண்மீனை நான் கண்டதுண்டு!
உன் கண்ணை நான் கண்ட பின்பு
அவற்றையெல்லாம் மறந்து போனேன்!
திகட்டாத செங்கரும்பே!
புளிக்காத வெண் தயிரே!
இதயத்தில் நீயிருந்தால்
இறுமாப்பில் திளைப்பேன் நான்!

காதல் கவிதைகள் - 4

வானத்தின் விண்மீனே!

வார்த்தைகளின் வசந்தமே!

வாழ்க்கைத் துணைவியே!

வாடாத மலரே!

வருத்தமென்ன சொல்லடி!

கடைக்கண் போதுமடி!

தங்கத்தைத் தந்திடுவேன்!

கழுத்தசைந்தால் போதுமடி!

வைரத்தை வார்த்திடுவேன்!

வாயசைத்தால் போதுமடி!

வெள்ளியை வீசிடுவேன்!

பூங்கொடியே!

உனக்குப் பூ வேண்டுமா?

மலரே!

சூடுவதற்கு மலர் வேண்டுமா?

தேனே!

உனக்குத் தேன் வேண்டுமா?

என்ன தேவை சொல்லடி!

இருந்தால் கொடுத்திடுவேன்!

இல்லையென்றால் படைத்திடுவேன்!